×

குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் போலீசார் தாக்கியதில் மாதர் சங்க நிர்வாகி மயக்கம்: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பரபரப்பு

செங்கல்பட்டு, டிச. 25: குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர்கள் சங்கம், இந்திய மாதர் சங்கம் ஆகியவை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் போலீசார், தாக்கியதை கண்ட மாதர் சங்க நிர்வாகி மயக்கமடைந்தார். இதனால், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப்பெற வலியுறுத்தியும்  மசோதாவுக்கு ஆதரவளித்த அதிமுகவை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர்கள் சங்கம், இந்திய மாதர் சங்கம் ஆகியவை இணைந்து  செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணை செயலாளர் கந்தன், மாவட்ட  செயலாளர் புருஷோத்தமன், மாதர் சங்க மாநில செயலாளர் பிரமீளா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நேற்று காலை திரண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பல்லவன் எஸ்பிரஸ் ரயிலை மறித்து, தண்டவாளத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

தகவலறிந்து டிஎஸ்பிக்கள் செங்கல்பட்டு கந்தன், மதுராந்தகம் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.  இதனால் அவர்கள், டிக்கெட் கவுன்ட்டர் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் இளைஞர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார், இளைஞர் சங்க நிர்வாகிகளையும், மாதர் சங்க நிர்வாகிகளையும் குண்டு கட்டாக தூக்கி செல்ல முயன்றனர். இதனால், போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த போலீசார், மாநில நிர்வாகி கந்தனை கழுத்தை பிடித்து கீழே தள்ளினர்.இதை பார்த்த மற்ற நிர்வாகிகள், போலீசருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் மாதர் சங்க நிர்வாகி புஷ்பா மயக்கம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உட்பட 60 பேரை கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Mathrubhumi ,
× RELATED கோடநாடு கொலை குற்றவாளிகள் சயான், மனோஜ்...